சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், பொதுச்செயலாளர் நியமனத்தில் சர்ச்சை இருப்பதால் சசிகலாவின் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை எனக் கூறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அவரது நியமனம் செல்லாது என சசிகலா புஷ்பா மற்றும் ஓ.பி.எஸ்., தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் தினகரன் பதில் அளித்திருந்தார். இதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து சசிகலா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்தார். ஓ.பி.எஸ்., தரப்பினர் நேரில் சென்று பொதுச்செயலர் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருந்தனர். தற்போது வரை அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த இரு தரப்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.