வாழ்க்கையின் முக்கியமான தருணமாக அனைவரிடத்திலும் பார்க்கப்படுவது திருமணமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட திருமணத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத தருணமாக இருந்திருக்கிறது.
தனது திருமணத்தில் நடந்த சங்கடமான சம்பவத்தால் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேலையை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. நிறுவனம் ஒன்றில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் வகையில் பழகி வந்திருக்கிறார்.
அதன் காரணமாக ஒருவர் மிச்சமில்லாமல் தன்னுடைய திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் திருமண நாளன்று, பெண்ணின் அலுவலக நண்பர்களில் ஒருவரை தவிர மற்ற எவருமே வராதது அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட 70 பேருக்கு அழைப்பு விடுத்திருந்ததால் அவர்கள் அனைவரும் தனது திருமணத்திற்கு வருவார்கள் என எண்ணி, அவர்கள் சாப்பிடுவதற்காக விருந்தும் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் எவருமே வராததால் சாப்பாடு அனைத்தும் வீணாகியிருக்கிறது. இதனால் உறவினர்கள் முன்பு சங்கடத்தை அனுபவிக்க வேண்டியதாகியிருக்கிறது.
இதனால் கடுமையான அதிருப்திக்குள்ளான அந்த மணப்பெண் தான் அவமதிக்கப்பட்டதாக எண்ணி முக்கியமான முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி, திருமணம் முடிந்து அலுவலகம் சென்றதும் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்.
அதன்படி அவர் வழங்கிய ராஜினாமா கடிதம் ஒரு இரங்கல் பதிவுபோல இருந்திருக்கிறது. அதில் “இன்னும் இரண்டு வாரத்தில் நான் விடைபெற்றுவிடுவேன். இந்த மிகப்பெரிய இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறாராம்.