கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டு செல்லப்படுகிறது
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 61 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
குழி தோண்ட ரிக் இயந்திரம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் குறுக்கீடும், மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. இதுவரை 40 அடி தோண்டப்பட்டு இருப்பதாகவும் முதல் ரிக் இயந்திரம் 35 அடி தோண்டியதாகவும், இரண்டாவதாக வந்த ரிக் இயந்திரம் இதுவரை 5 அடி தோண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டு செல்லப்படுகிறது. இந்த டிரில் பிட் ரிக் இயந்திரத்தின் முனைப்பகுதியில் பொருத்தப்பட்டு இன்னும் வேகமாக குழி தோண்ட பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.