அதிமுக ஆட்சியை கவிழ்க்க துளியளவும் முயற்சிக்கவில்லை என்றும், ஆட்சியை பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அவர்களே கவிழ்த்துக் கொள்வார்கள் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தோல்வியடைந்ததால் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியை கவிழ்க்க துளியளவும் முயற்சிக்கவில்லை. ஆட்சியை பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அவர்களே கவிழ்த்துக் கொள்வார்கள்” என்றார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிமுகவுக்குள் நடக்கும் போட்டா போட்டி குறித்த கேள்விக்கு, “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமல்ல; அவர்களுக்குள் பல போட்டா போட்டிகள் உள்ளன. அதன் காரணமாகத்தான் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று பிரிந்து கிடக்கிறார்கள்” என்றார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது, “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க போட்ட திட்டம் எதுவும் நிறைவேறவில்லை. சட்டமன்றத்தில் ஆட்சியைக் கலைக்க திட்டம் போட்டார். மேலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துவிட்டன. அந்த விரக்தியில்தான் பேசுகிறார். ஏற்கனவே பினாமி ஆட்சி என்றார். இப்போது பாஜகவின் பினாமி ஆட்சி என்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்” என்று அவர் கூறினார்.