இந்திராணி, பீட்டர் முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை ; கார்த்தி சிதம்பரம் பேட்டி

இந்திராணி, பீட்டர் முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை ; கார்த்தி சிதம்பரம் பேட்டி
இந்திராணி, பீட்டர் முகர்ஜியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை ; கார்த்தி சிதம்பரம் பேட்டி
Published on

தன்னுடைய வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தனர். டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன் ஜாமீன் மனுவை நேற்று முன் தினம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், நேற்று இரவு அவர் டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

ப.சிதம்பரம் கைதினை தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கவும், பாஜக அரசின் மீதான விமர்சனங்களை திசைதிருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் பேசுகையில், “கைது செய்வதற்கான எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லை. 20 முறை எனக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நான்கு முறை ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். சிபிஐ விசாரணையில் 11 நாட்கள் இருந்துள்ளேன். அவர்களிடம் தற்போது வழக்கு இல்லை. எங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு தொடங்கி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து வரை எனது தந்தை விமர்சித்து வந்தார், அவரை அடக்கி ஒடுக்கவே இந்த கைது நடவடிக்கை

என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்ற போதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறினார். 

அத்துடன் திமுக சார்பில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதாக கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com