அரியலூர் அனிதாவின் தற்கொலை, நீட் தேர்வை மறுபரிசீலனை செய்யவேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து கனத்த மனதுடன் கடிதத்தை எழுதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து பழைய நிலையை திரும்பக் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி சேலம், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பிலும் பல இடங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.