18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. இரு தொகுதி தேர்தல் தொடர்பான வேறு வழக்குகளிலும், தேர்தலை நடத்தக் கூடாது என்று எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடப்படும்” என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.