தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடைமுறையை கைவிடுவது தொடர்பாக அரசு வழக்கறிஞர்களின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
பாரதிய ஜனதாவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் சின்னங்களுக்கு பதில் வேட்பாளர்கள் பெயர், வயது, கல்வித்தகுதி, புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது குறித்து அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் கருத்து தெரிவிக்க உத்தரவிட்டது.
எனினும் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் முறையான நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை. தேர்தல்களில் சின்னம் பயன்படுத்தாமல் வேட்பாளர்கள் பெயர், கல்வித்தகுதி, வயது, படம் போன்றவற்றை பயன்படுத்துவதால் நேர்மையான, திறமையான பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பாக இருக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சின்னம் பயன்படுத்தும் முறை கைவிடப்படுவதால் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகளின் தலைமைகள் ஆதிக்கம் செலுத்துவது தடுக்கப்படும் என்றும் மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கே வாய்ப்பு வழங்கும் நெருக்கடி உண்டாகும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கிரிமினல் குற்றவாளிகள் மயமாவதை தடுக்கவும் இயலும் என்றும் மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா தெரிவித்திருந்தார்.