நம் ஊர் திரைப்படங்களில் வேட்டைக்காரன் என்றாலே பெரும்பாலும் வில்லனாக காட்சிப்படுத்துவது வழக்கம். ஆனால் நிஜ வாழ்க்கையில் வேட்டைக்காரரான ஜிம் கார்பெட்டை காக்கும் கடவுளாகவே வழிபட்டு வருகின்ற மக்களும் வட இந்தியாவில் உள்ளனர். அவருக்கு இன்று பிறந்த நாள்.
1875இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்த இந்தியாவின் நைனிட்டால் பகுதியில் பிறந்தவர். பிரிட்டிஷ் நாட்டவர். மிகப் பெரிய குடும்பத்தில் வளர்ந்த அவருக்கு சிறு வயது முதலே காடு மற்றும் காட்டுயிர்களின் மீது கொள்ளை ஆர்வம். விடுமுறை காலத்தில் அவர் மேற்கொண்ட காட்டு வழிப் பயணங்களும் அந்த ஆர்வத்திற்கு தீனி போட்டுள்ளன. அந்த பயணங்களின் மூலமாக மிருகம் மற்றும் பறவைகளை எப்படி கண்டறிவது என்ற வித்தையிலும் கைதேர்ந்துள்ளார்.
அவரது குமாயுன் புலிகள் புத்தகத்தில் ‘புலியின் கால் தடத்தைக் கண்டே அதன் நீளம் என்ன? அது எந்த வேகத்தில் செல்கிறது? என அனைத்தையும் சொல்லி விடலாம்’ எனத் தெரிவித்துள்ளதே அதற்குச் சான்று. இப்படி பல மிருகங்களின் தடங்களை வைத்ததே அடையாளம் காண்பதில் கார்பெட் வல்லவர்.
வளர்ந்ததும் ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர் சொந்தமாகத் தொழிலும் செய்துள்ளார். அவரது இளமையில் மிருகங்களை எப்படி வேட்டையாடுவது என்பதிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் குமாயுன் பகுதியில் ஆட்கொல்லி புலிகளின் அட்டகாசம் ஆரம்பிக்க மக்களைக் காப்பதற்காக அவற்றை வேட்டையாடி கொல்ல காட்டுக்குள் இறங்குகிறார் கார்பெட். சுமார் 1200 பேரைக் கொன்ற பன்னிரண்டு ஆட்கொல்லி புலிகளை கார்பெட் கொன்றுள்ளார். அதோடு ஆட்கொல்லிகளாகத் திரிந்த சிறுத்தைகளையும் அவர் வேட்டையாடி கொன்றுள்ளார். அதன் மூலம் குமாயுன் மக்களின் மனதில் கடவுளாகவே வாழ்கிறார்.
ஆட்கொல்லி புலிகள் மற்றும் சிறுத்தைகள் எதனால் அதன் இயல்பிலிருந்து மாறி மனிதர்களைக் கொள்கின்றன என்பதையும் கார்பெட் தனது புத்தகத்தின் வழியாக அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். புலிகளின் உடலில் உள்ள உறுப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டால் தான் அது ஆட்கொல்லி புலிகளாக மாறுகின்றன என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். புலி ஒரு கொடூரமான விலங்கும் அல்ல என்பதை அதில் குறிப்பிட்டுள்ளார். பகல் நேரங்களில் மனிதர்களைக் கொல்வது புலி என்றும், இரவு நேரங்களில் அதைச் செய்வது சிறுத்தைகள் என்றும் கண்டறிந்தார்.
பின்னாளில் காட்டுயிர் பெருக்கத்தில் அவரது நண்பர் பெட்ரிக் வால்டர் சாம்பியனின் செயல்பாட்டைப் பார்த்து ஆர்வம் செலுத்த துவங்கினார் கார்பெட். அதன் பலனாக அவர்கள் இருவரும் இணைந்து புலிகளை காப்பதற்கான தேசிய பூங்காவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினர். அந்த பூங்கா தான் உத்தரகாண்டில் உள்ள கார்பேட் தேசிய பூங்கா. இங்கு தான் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி, நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து காட்டுக்குள் இறங்கியதும் இங்கு தான்.
1947இல் கென்யாவுக்கு சென்று ஓய்வெடுத்த கார்பெட் அங்கேயே தனது கடைசி காலம் வரை வாழ்ந்தார்.
தனது கானுயிர் மற்றும் வேட்டை அனுபவங்களைத் தனது புத்தகங்களின் ஊடக பகிர்ந்துள்ளார் கார்பெட். அவர் உலகை விட்டு மறைந்திருந்தாலும் அவரது எழுத்துகளின் மூலமாக உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்.