ஆறுக்குட்டி எம்எல்ஏவின் விமர்சனங்களுக்கு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும், அக்கட்சியின் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “ஆறுக்குட்டி போன்ற மந்தை தாவுகிற ஆட்டுக்குட்டிகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அது ஏற்கனவே ஓபிஎஸ் மந்தையிலிருந்து ஈபிஎஸ் மந்தைக்கு வந்த ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டி இன்னொரு மந்தைக்குப் போவதற்கு கணக்கு பார்க்கிறது. எனவே ஆறுக்குட்டியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அடுத்து பேசிய புகழேந்தி, “ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவருடைய தொகுதிக்கு வந்த அப்போதைய அமைச்சர் கே.பி.முனுசாமியை சந்திக்க மறுத்து தகராறு செய்ததார் ஆறுக்குட்டி. அப்போது கொடநாட்டில் இருந்த ஜெயலலிதா, கோபமுற்று பதவியிலிருந்து ஆறுக்குட்டியை தூக்கி எறிந்தார். அவர் மற்றவர்களை குறைசொல்லத் தகுதியில்லை” என்றார். மேலும் நாஞ்சில் சம்பத்தும், தானும் கோபமாகவும், வேகமாகவும் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்வதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, “சசிகலா குடும்பத்துக்கு அதிமுகவில் இனி இடமில்லை. நாஞ்சில் சம்பத்தும், அதிமுகவின் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தியும் தேவையில்லாமல் பேசி பிரச்னையை பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.