பரமத்தி வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட வேலூர் பேரூராட்சி வார்டு மறுவரையறை செய்ததில் ஏற்பட்ட குளறுபடி. மக்கள் கருப்புக் கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளையும் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்து வார்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சியின் 3-வது வார்டு பகுதியில் இருந்த கோவில்காடு மற்றும் ராஜா நகர் பகுதியில் இருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வாக்குகளை ஒழுகூர்பட்டி இரண்டாவது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒழுகூர்பட்டியில் உள்ள குப்புச்சிபாளையம் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதிக்கு இடையே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் ஒழுகூர் பட்டிக்கு அருகில் உள்ள பகுதியை அந்த வார்டுடன் இணைத்ததை விடுவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஆய்வு செய்த பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், மறுசீரமைப்பு முடிவுகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் தற்போது பேரூராட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை ஒழுகூர்பட்டியிலிருந்து விடுவித்து தங்களுக்கு மிக அருகில் உள்ள ஐந்தாவது வார்டுடன் இணைக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.