நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு அவருக்காக நடைபெற்ற பிரகாஷ் காரத்தின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்காமல் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் செல்வராசு கலந்துகொள்ளவில்லை.
அதேநேரத்தில் திருவாரூர் பனகல்சாலையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட செல்வராசு, மேடைக்கு சென்று சீமானை சந்தித்தார். இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு, தான் செல்லும் வழியில் சீமானின் பேச்சை கேட்டதாகவும் மோடியை பற்றி விமர்சித்து பேசியதால் அதனை நேரில் கேட்க சென்றதாகவும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்றும் செல்வராசு விளக்கம் அளித்துள்ளார். வாக்கு சேகரிக்க சென்றதாலேயே பிரகாஷ் காரத்தின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றும் செல்வராசு தெரிவித்துள்ளார்.