தனது தாயார் அவரது தோடை 600 ரூபாய்க்கு அடகு வைத்து படிக்க வைத்ததால் இன்று காவல்துறை டிஐஜி ஆகியுள்ளேன் என திண்டுக்கல் காவல் சரக துணை தலைவர் முத்துச்சாமி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். கொடைக்கானல் கீழ்மலை பழங்குடி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அந்நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கள்ளக்கிணறு பழங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க, திண்டுக்கல் காவல் சரக துணை தலைவர் முத்துச்சாமி வந்திருந்தார். நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த தொண்டு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 80 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய அவர், அக்கிராமத்தில் உள்ள குழந்தைகள், படிப்பின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் என்று பேசினார்.
அவர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், அவரின் மேல்படிப்பிற்காக அவரது தாயார் தோடை 600 ரூபாய்க்கு அடகு வைத்து, படிப்புக் கட்டணம் செலுத்தியதாகவும், அவரின் தாயார் அவ்வாறு செய்யாதிருக்காவிட்டால், இன்று, இவ்வளவு பெரிய உயர் பதவியை அடைந்திருக்க முடியாது என்று, அங்கு கூடியிருந்த மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.
மேலும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கள்ளக்கிணறு கிராமத்திற்குச் செல்லும் பாதையை சீரமைக்கவும், கிராமத்தின் முன்பு ஓடும் காட்டாற்றை கடக்க பாலம் அமைக்கவும் முயற்சிகள் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அதேபோல அக்கிராமத்தில் இருந்து வருடம் ஐந்து நபர்களை சமூக அமைப்பின் உதவியோடு படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காவல்துணை தலைவரின் கனிவான அணுகுமுறை அக்கிராம மக்கள் அனைவரையும் கவர்ந்தது.