ஐபிஎல் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு அகமதாபாதில் களம் காணுகின்றன.
இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் கொல்கத்தா 2 வெற்றிகளையும், டெல்லி 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.
கொல்கத்தாவைப் பொருத்தவரை, தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் கடைசி ஆட்டத்தில் வென்றது, அந்த அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்கள்தான் பிரச்னையாக இருக்கிறது.
இளம் வீரரான சுப்மன் கில் இன்னும் தன்னுடைய பேட்டிங் திறனை நிரூபிக்கவில்லை. நதீஷ் ரானா ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார். பேட்டிங்கை பொறுத்தவரை ராகுல் திரிபாதி, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கிறது. ஆல் ரவுண்டர்களில் சுனில் நரேனும், ஆண்ட்ரே ரசலும் நம்பிக்கையளிக்கின்றனர். பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை எடுக்க உதவுவார்கள்.
டெல்லியைப் பொறுத்தவரை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் பெங்களூரிடம் ஒரு ரன்னில் தோற்றது. கேப்டன் ரிஷப் பன்ட் - ஷிம்ரன் ஹெட்மயர் கூட்டணி அந்த ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடியிருந்தது. டெல்லி பேட்டிங் வலுவானதாகவே இருக்கிறது. பிருத்வி ஷா - தவன் நல்லதொரு தொடக்கத்தை அளிக்கின்றனர்.
மிடில் ஆர்டரில் பந்த், ஸ்மித்துடன் தற்போது ஹெட்மயரும் நம்பிக்கை அளிக்கிறார். அதேபோல ஆல் ரவுண்டரில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அசத்துகிறார். மேலும் பவுலிங்கை பொறுத்தவரை இஷாந்த் இஷாந்த் சர்மா, ரபாடா, அவேஷ் கானும் இருக்க, சுழற்பந்துவீச்சுக்கு அக்ஸரும், அமித்தும் தரமான சம்பவங்களை செய்தால் இன்றையப் போட்டி டெல்லி வசமாகும்.