காரைக்காலில் இந்து கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் இலவசமாக வீட்டு மனைப்பிரிவு பட்டா நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள கீழகாசாகுடியில் 35 ஆண்டுகளுக்கு முன் ஒத்தை பனைமர முனீஸ்வரருக்கு சிறிய அளவில் கோயில் இருந்தது. விளை நிலங்கள் உள்ள அந்த இடத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் அப்துல்காதர் என்பவர் விலைக்கு வாங்கினார். அங்கு சிறிய கோயில் அமைத்து மக்கள் வழிபட்டதை அவர் தடுக்கவில்லை.
தற்போது அந்த இடத்தில் மனைப்பிரிவுகள் பெருகிய நிலையில், அப்துல்காதர் நிலத்தில் இருந்த சிறிய கோயில் தற்போது அதிக மக்கள் வழிபடும் இடமாக மாறிவிட்டது. இதை அறிந்த அப்துல்காதர் அந்த இடத்தை கோயிலுக்கு தானமாக அளித்துள்ளார். கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலகண்ணன் முன்னிலையில் அப்துல் காதர், தனது நிலத்தை கோயிலுக்கு வழங்கியதற்கான பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் அளித்தார். இந்நிகழ்வு மத நல்லிணக்க நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.