5 ஸ்டார் போன்ற சொகுசு விடுதிகளில் தங்கவோ, சாப்பிடவோ சென்றால் அதற்கென சில உடை கட்டுப்பாடுகள், பழகும் விதம், கட்டணம் செலுத்தும் முறை என பலவும் குறிப்பிட்ட நிலையிலேயே செய்ய வேண்டும் என்ற விதியெல்லாம் இருக்கும்.
ஆனால் இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக மும்பையின் பிரபல நட்சத்திர விடுதியான தாஜ் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு அதற்கு காசாக பணமாகவோ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல் சில்லறைகளாக கொடுத்திருக்கிறார் சித்தேஷ் லோக்ரே என்ற Vlogger.
இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வைரலாக்கியிருக்கிறார். நெட்டிசன்கள் பலரும் சித்தேஷின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.
‘Out of the blues’ என்ற பெயரில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சித்தேஷ். அதன்படி, ஸ்டார் ஹோட்டல்களில் பணம், கார்டு கொடுக்கும் வழக்கமான பரிவர்த்தனை முறைகளை களைந்து சில்லறைகளை கட்டணமாக கொடுத்து அசர வைத்திருக்கிறார்.
அந்த வகையில் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு சென்ற சித்தேஷ், அங்கு பிட்சா மற்றும் மாக்டெயில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கு கட்டணமாக சில்லரைகளையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்த சித்தேஷ், “பரிவர்த்தனைதான் முக்கியம். அது டாலராக இருந்தாலும் சரி, சில்லறையாக இருந்தாலும் சரி.” என கேப்ஷன் இட்டிருக்கிறார். இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும், “இதேப்போன்ற தன்னம்பிக்கை எங்கள் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்” என்றும், “நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். யாருக்காவும் மாற வேண்டாம். உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள்.” என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.