ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுத்த வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி இன்று தன்னுடைய சொந்த நகரமான ராஞ்சிக்கு புறப்பட்டார்.
13 ஆவது ஐபிஎல் போட்டி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல்ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு பயிற்சி எடுப்பதற்காக மார்ச் 1 ஆம் தேதி சென்னை வந்தார் தோனி. மார்ச் 2 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் சென்னை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியது முதலே சென்னை ரசிகர்களின் உற்சாகம் பன்மடங்கும் கூடியது. பயிற்சி தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுபோக, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பதால், நாள்தோறும் பயிற்சியை காண குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் தேதி ஒத்திவைக்கப்பட்டதால், சிஎஸ்கே வீரர்களின் பயிற்சிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து கிரிக்கெட் பேட், அவரது புகைப்படங்கள் போன்றவற்றிலும் தோனி ஆட்டோகிராப் போட்டார். மேலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், இளம் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் தோனி உரையாடினார். பின்பு, சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட்டார். இப்போது மீண்டும் தோனி எப்போது சென்னைக்கு வருவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.