கொரோனாவால் சிறு தொழிலதிபர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது உரை தடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி. வசந்தகுமார் நேற்று உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸை ஒரு தேசிய பேரழிவாக அறிவிக்கும்படி அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவர் உரையை முடிக்க அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா ஆரம்பகட்டத்தில் இருந்தபோது மக்களவை தொலைக்காட்சியில் மார்ச் 20ஆம் தேதி இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. ‘’கொரோனா வைரஸை ஒரு தேசிய பேரழிவாக அறிவிக்கும்படி நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் முழுநாட்டையும் பாதித்துக்கொண்டுள்ளது’’ என்று கூறுகிறார்.
கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள சிறு தொழிலதிபர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர், அவர்களைக் பாதுகாக்க மத்திய அரசு உடனே செயல்படுமாறும், மீதமுள்ள தனது உரையை கேட்கும்படி அவர் கூறுகிறார்.
மேலும் வருமானமே இல்லாத நிலையானது நிச்சயமாக கடன்களை திருப்பிச் செலுத்துவதை பாதிக்கும். எனவே சிறு தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களின் கடன் தொகையை திருப்பிசெலுத்துவதை குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது மறுசீரமைக்குமாறு தான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். பேரழிவு முடியும் வரை அனைத்து துறைகளுக்கும் ஜிஎஸ்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
நாடு முழுவதும் தினக்கூலி வேலை செய்பவர்கள்தான் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். மேலும் நெருக்கடியைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்தில் கடைசியாக பேசும்போதுகூட மக்கள் மற்றும் தொழிலதிபர்கள்மீது அக்கறைகொண்டவராகவே பேசியுள்ளார். அவரது உரையை முடிக்க அனுமதி கொடுக்காமல், சபாநாயகர் ஓம் பிர்லா, அடுத்த எம்.பியை பேசச் சொல்கிறார்.
வசந்தகுமார் இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் எ.பி ஆக இருந்தபோதிலும், தமிழகத்தில் வசந்த் & கோ நிறுவனத்தின் விளம்பரத்தில் வரும் அவருடைய சிரித்த முகத்தையே பலரும் நினைவில் கொள்கிறார்கள். வீட்டு சாதனங்கள் மற்றும் மின் சாதனங்களில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய விற்பனையாளர்களில் இவரும் ஒருவர்.
2019ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குமுன்பு 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.