சேலத்தில் பொதுமுடக்கத்தை மீறி பழக்கடையை திறந்ததாக காவல்துறையினர் அழைத்துச்சென்ற நபரை மீட்கச் சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலுமிச்சை பழக்கடை வியாபாரி வேலுமணி. இவர் பொதுமுடக்கத்தை மீறி கடை வைத்திருந்ததாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதையறிந்த வேலுமணியின் தாயார் பாலாமணி காவல் நிலையத்திற்கு சென்று மகனை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், பாலாமணி நீண்ட நேரமாக காவல் நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த பாலாமணியை, உடனே காவலர்கள் முதலுதவி செய்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, பாலாமணி உயிரிழப்பு தொடர்பாக விசாரித்தனர். கடந்த மே 9ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே வழக்கை வாபஸ் பெறுமாறு காவல்துறைக்கு தொடர்புடைய சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பாலாமணியின் மகள் உமா மற்றும் மகன்கள் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாநகர காவல் ஆய்வாளர் குமாருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாலாமணியின் மகள் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் உமாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது அம்மாவை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு காவல்துறையினர் கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட உளைச்சலால் அவர் உயிரிழந்ததாகவும் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.