தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெயருக்குத்தான்: ஆனால் 10 ஆண்டுகளாக ஒரு கூட்டணி கட்சி கூட்டத்தைக்கூட பிரதமர் மோடி கூட்டவில்லை என்று சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பிர்சிங் பாதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய சுக்பிர் சிங் பாதல் “ தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நம்பிக்கையை இழந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வெறும் பெயருக்குத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆனால் ஒருமுறைகூட பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்தவில்லை. முன்பு அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், அவர் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமான உறவினை பேணி வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அகாலிதளம் கட்சி பாஜக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. பாஜக கூட்டணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிரோமணி அகாலிதளம் கட்சி அங்கம் வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.