கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அங்கு பேசிய அவர், திருவள்ளுவரின் சிலையும், விவேகானந்தரின் மண்டபமும் பல இந்தியர்களைக் கவர்ந்துள்ளது என்று கன்னியாகுமரி பற்றி புகழ்ந்தார். ’’தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை மத்திய மாநில அரசுகள் செய்துள்ளன. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக, நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம். 50 ஆண்டுகளாக யாரும் கவலைப்படாத நிலையில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்வே பாதை பணிகளான பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருசில குடும்பங்கள் மட்டும் இந்தியாவை உருவாக்கவில்லை, ஒவ்வொரு இந்தியரின் வியர்வையில் உருவாக்கப்பட்டது. நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீதுதான் கவனம் இருக்கிறது. திமுக வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர். மக்களின் நிலையை புரிந்துகொள்ளாத உயர்மட்ட அதிகார மமதையில் இருப்பதுதான் காங்கிரஸ்’’ என்று கூறினார்.
’’திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் அரசும் காங்கிரஸ் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. எங்களது அரசு அனைவருக்குமானது, கட்சி பேதமற்றது. புவிசார் பொருட்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பத்தில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. கடற்கரை பிரதேசங்களை முன்னேற்ற மூன்று அடுக்கு திட்டத்தை பின்பற்றுகிறோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நவீன கட்டமைப்பு மூலம் வாய்ப்புகள் உருவாக்குகிறோம்’’ என்றும் பிரதமர் மோடி பேசினார்.