தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொள்ள நாளை மறுநாள் முதல் பிரதமர் மோடி உட்பட பல்வேறு மூத்த தலைவர்களும் வரவிருக்கின்றனர்.
இதன்படி நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டக்குடி, திருவையாறு மற்றும் சென்னை துறைமுகம் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணி வரும் 27ஆம் தேதி அன்று கோவை தெற்கு மற்றும் சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வரும் 30ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
வரும் 31ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். அதே நாளில் தமிழகம் வரும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விருதுநகர், கோவை தெற்கு தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ளார். ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரவக்குறிச்சியில் களம் காணும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். ஏப்ரல் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பரப்புரை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நாகர்கோவிலிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.