ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளதாக எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று நடைபெற்றது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ கருணாஸ், ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் சுயநல கூட்டணி எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கூட்டணி மக்கள் நலனுக்கானது அல்ல எனவும் பாமகவுடன் கூட்டணியில்லை என ஜெயலலிதா கூறிய நிலையில் அதிமுகவின் கூட்டணி தொண்டர்களுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சின்னத்தில் போட்டியிட்டதால் எதிர்த்து பரப்புரை செய்ய முடியாது எனவும் சட்ட சிக்கல் உள்ளது எனவும் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்தார்.