சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா நிகழ்ச்சி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆர் படத்தைத் திறந்தும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி மற்றும் சென்னையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுக எம்எல்ஏக்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களோடு ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்று இருந்தது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக பங்கேற்காது எனக் கூறியுள்ளது. திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
திமுக பங்கேற்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.