கோப்புகளை மறைத்து குட்கா லஞ்ச பரிமாற்ற வழக்கிற்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த மஞ்சுநாதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நியமித்த கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி ஆகியோரை இடம் மாற்றி குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைக்கும் மூடுவிழா நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச்செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என கூறப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்பதை புலப்படுத்துவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க திமுக வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். அதிமுக அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ரூ.40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய சூழல் வரும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும், விசாரணை அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு துணை போகும் உயரதிகாரிகளும், விசாரணை வளையத்திலிருந்து நிச்சயம் தப்பமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.