திராவிட நாடு கொள்கையை அண்ணா அன்றே கைவிட்டுவிட்டார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்கள் அடுத்தடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென் மாநிலங்கள் செலுத்தும் வரிகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் வழங்கப்படுவதாக ஒரே நேரத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு நேற்று ஸ்டாலின் சென்றபோது அவரிடம், தென் மாநிலங்கள் ஒன்றிணைவதைப் பார்க்கும்போது, திராவிட நாடு கோரிக்கை வலுவடைவதைப்போல் தோன்றுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திராவிட நாடு கோரிக்கை ‘வந்தால் வரவேற்கப்படும் என்று பதில் அளித்தார்.
இந்நிலையில். திராவிட நாடு கோரிக்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், “செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தால் திமுக அதனை வரவேற்கும் என்று கூறினேன். திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அன்றே கைவிட்டிருக்கிறார். இருப்பினும் திராவிட நாடு கோரிக்கையை கைவிடும் போது தெளிவாக கூறியிருக்கிறார். ‘திராவிட நாடு கொள்கையை கைவிட்டிருக்கிறோமே தவிர, அதற்கான காரண காரியங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று கூறினார்.
அண்ணா சொன்னது இப்போது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்பது தெரிகிறது. தென்மாநிலங்கள் எப்படி பாரதிய ஜனதா கட்சியால் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். திராவிட நாடு என்ற கோரிக்கையை திமுக எழுப்பியது போலும், அதற்கு திமுக ஆதரவு தெரிவிப்பது போலவும் ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று கூறினார்.