நெருப்பாற்றில் திமுக போட்ட எதிர்நீச்சல்தான் 2ஜி வழக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கு தொடர்பாக திமுகவினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் உண்மையை எடுத்துரைத்தபோதும், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பரப்புரைகளும், வழக்குகளும் தொடர்ந்து கொண்டே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எந்த நெருக்கடியையும், எத்தகையை சோதனைகளையும் எதிர்கொள்ளும் வலிமை மிகுந்த திமுக, இந்த வழக்கையும் துணிவோடு சட்டரீதியில் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிபதி சைனி அளித்த தீர்ப்பு, இந்திய அளவில் திமுக மீது சுமத்தப்பட்ட பெரும்பழி நீங்கிய மகிழ்ச்சியை கட்சியின் ஒவ்வொரு தொண்டரின் முகத்திலும், அகத்திலும் வெளிப்பட்டதைக் காண முடிந்தது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக அவமதிப்பையும், அவதூறுகளையும் திமுக எதிர்கொண்டு, நெருப்பாற்றில் எதிர்நீச்சலிட்டு, 7 ஆண்டுகளுக்குப் பிறகு புடம் போட்ட தங்கமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கற்பனை குதிரையில் சவாரி செய்து வீழ்த்தி விடலாம் என நினைத்த அரசியல் எதிரிகளுக்கும், இனப் பகைவர்களுக்கும், நீதியின் துணையுடன் திமுக பதிலடி கொடுத்துள்ளதாக குறித்தார். அநீதி வீழ்ந்து, அறம் வென்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் வகையில் திமுக எழுச்சியுடன் வீறுநடைபோடும் என்றும், எதிரிகளின் எண்ணங்கள் தவிடுபொடியாகும் என்றும் கட்சியினருக்கு எழுதியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.