‘மத வெறியை தூண்டாதே’: சாலையில் போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது

‘மத வெறியை தூண்டாதே’: சாலையில் போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது
‘மத வெறியை தூண்டாதே’: சாலையில் போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது
Published on

‘பெரியார், அண்ணா பிறந்த மண்ணிலே மத வெறியை தூண்டாதே’ என முழக்கமிட்டவாறு தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.. திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ ரத யாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத யாத்திரை ராமன் கோயில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ரத யாத்திரையை அனுமதித்தது ஏன்? மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?” என கடுமையான பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரத யாத்திரை சென்றுள்ளது. இந்த யாத்திரையால் எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்” என்றார். ஆனால் முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் தொடர் அமளியில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். பின்னர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மு.க.ஸ்டாலின், ‘ பெரியார், அண்ணா பிறந்த மண்ணிலே மத வெறியை தூண்டாதே’ என கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இதனையத்து ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com