திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. ’விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுக நடத்திவரும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ’ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டார்.
அதில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் கல்வித்தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழிப்போம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.