திமுக தலைவர் கருணாநிதி பாணியில் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை மாவட்ட வாரியாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார் .
சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் கட்சி நிர்வாகிகளிடம் குறைகளை கேட்கவும், கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கவும் கடந்த 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின் கள ஆய்வை தொடங்கினார். இந்த கள ஆய்வில் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினரை அவர் சந்தித்துள்ளார். இதுவரை ஏறக்குறைய 2 ஆயிரம் பேரை ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மணிநேரம் ஸ்டாலின் உரையாற்றியதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட பெருந்தோல்வியால் தான், அந்த பகுதிகளில் முதலில் ஸ்டாலின் ஆய்வை தொடங்கியுள்ளதாக கூறும் திமுகவினர், இந்த கள ஆய்வில் புகார் பெட்டி, தீர்வு பெட்டி வைத்து தொண்டர்களின் கருத்துக்கள் அறியப்படுவதாகவும் கூறினர். இதுவரை 4 ஆயிரம் பேர் இந்த பெட்டிகளில் மனுக்களை போட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.