ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததை, தமிழக தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கூட்டு சேர்ந்து மூடி மறைக்கும் வேலையை செய்துள்ளார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வழக்குப்பதிவு செய்ய வேண்டிய காவல்துறை முதலமைச்சருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. அவற்றை முறையாக விசாரிக்க வேண்டுமென்றால் அவர்கள் இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். இவ்வளவு ஆதாரங்கள் எடுத்துக்காட்டி பேசிய எனது பேச்சுக்களை சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். இந்தப் பிரச்னையில், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கூட்டு சேர்ந்தே இதையெல்லாம் மூடி மறைக்கும் வேலையை செய்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டுகிறேன்” என்று கூறினார்.