ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் ஏற்கனவே நடந்த சோதனைகள் என்ன ஆனது? என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “இந்த ஆட்சியில் ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனை என்ன ஆனது? அதன் மீது என்ன நடவடிக்கை? என்பது இதுவரை தெரியவில்லை. அதன்பிறகு குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ரூ.89 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் உட்பட பல அமைச்சர்களின் பெயர்களும் உள்ளன. அது தொடர்பாக என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் என்ன ஆனது? எதற்காக இந்த சோதனைகள்? நடைபெறுகின்றன. உண்மையாக சோதனையில் என்ன கண்டுபிடித்தார்கள்? என்ன வழக்கு தொடர்ந்துள்ளார்கள்?” என கேள்விகளை அடுக்கினார்.