மழைக்கால சிறப்பு முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை அடுத்து தமிழகத்தில் தொற்று நோய் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் பொதுமக்களுக்காக மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள நடமாடும் மருத்துவக்குழுக்களையும், மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 2 ஆயிரத்து 650 மழைக்கால சிறப்பு முகாம்கள் இயங்குவதாக தெரிவித்தார். மேலும் இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 358 பேர் இந்த முகாம்களில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.