எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி

எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி
எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி
Published on

புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களும் நிதி அளித்துள்ளனர். சினிமா துறை, தொழில் துறை பிரபலங்கள் பலரும் முதலமைச்சரை சந்தித்து புயல் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இதனிடையே காஜ புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் தாக்கத்திற்கு பிறகு பல்வேறு கடலோர மாவட்டங்களில் மக்கள் அமைச்சர்களை உள்ளே சேர்க்கவில்லை. அனைவரையும் துரத்தியடித்தனர். சில நாட்களுக்கு பிறகு நிலைமை சரியான பிறகே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்று கடலோர மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிலையில் கஜா புயல் நிவாரண நிதி மக்களை சென்றடையவில்லை எனவும் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் திமுக, அமமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. 

இதைத்தொடர்ந்து புயல் பாதிப்பு பணியில் எங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி புயலின் வேகம் கடுமையாக இருந்ததாகவு முதல் நாள் கோபமாக இருந்த மக்கள் அமைச்சர்கள் அதிகாரிகளின் பணியால் அன்பை பொழிந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலேயே குழாய் மூலம் குடிநீர் 99 சதவீதம் வழங்குவது தமிழகம் தான் எனவும் கஜா புயலின் போது ஊராட்சி துறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதால், மீனவர்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com