அமைச்சர் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு..!

அமைச்சர் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு..!
அமைச்சர் கொலை மிரட்டல் விடுப்பதாக  அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு..!
Published on

தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டல் வருவதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பரபரப்பு பேச்சு. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினரிடையே விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்சி விவகாரம்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என 1000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்கச் சொன்னார்கள்.


இப்பொழுது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னை தரக்குறைவாக பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே 6 மாதமாக கொலை மிரட்டல் விடுத்து பேசி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த ராஜவர்மன், கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு அதிமுக என்ற கட்சியின் வெற்றிக்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக்கூறினார்.


தொடர்ந்து பேசிய ராஜவர்மன், நான் இருக்கும் இடத்திற்கு விஸ்வாசமாக இருப்பேன் என்னை இந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முதல்வரும் துணை முதல்வரும் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வைத்து இருக்கிறார்கள். இந்த வேலைக்காரனை பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் என்னை தூக்கி எறியுங்கள். நான் என்றுமே பொதுமக்களின் காலுக்கு செருப்பாக இருப்பேன் என்று பேசினார்.


மேலும் சாத்தூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சரின் ஆதரவாளர்கள் தரப்பில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சர் அணி மற்றும் எம்.எல்.ஏ அணி என இரு பிரிவாக சாத்தூர் பகுதியில் அதிமுகவினர் செயல்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com