அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிரானவர்கள் பலரையும் கட்சியில் இருந்து நீக்கி வரும் தினகரன், அமைச்சர் தங்கமணியை கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கும், கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்கத்தில் தனக்கு எதிரான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் கட்சி பதவியை பறிப்பதாக அறிவித்து வந்த தினகரன், நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமியையே கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.அன்பழகன் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். அமைச்சர் தங்கமணி, முதல்வர் பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் என்பதும், கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்த ஆலோசனையில் முக்கிய இடம்பிடித்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.