அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி விரதமிருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். காலணி அணியாமல் தாடி வளர்த்தபடி வாக்கு சேகரித்து வருகிறார். "வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விரதத்தை தொடர்வேன்" என்றார் அவர்.
சட்டப்பேரவைத் தேர்தளுக்கான இறுதிக்கட்ட பரப்புரை களைகட்டி வரும் நிலையில், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 3 வாரங்களாக தனது தொகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாமல் தொகுதிக்குள்ளேயே அவரது மூத்த மகள் ப்ரியதர்ஷினியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சர் ஆர்பி.உதயகுமார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திருப்பதி, பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செய்து விரதமிருந்து வருகிறார். இதனால் அவர் காலணி அணியாமல் முகச் சவரம் செய்யாமல் தாடியுடன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "வாக்குப்பதிவிற்கு பின்னர் அனைத்து கோவிலுக்கும் சென்று வழிபட உள்ளேன். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விரதம் மேற்கொள்ளவுள்ளேன்” என்று தெரிவித்தார்.