ஆவடியில் அதிமுகவிற்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினரை, அமைச்சர் பாண்டியராஜனின் உதவியாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று பரப்புரை மேற்கொண்டனர். அப்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக துண்டு பிரசுரம் அடித்து வீதிவீதியாக வழங்கி வந்தனர்.
இதனை அறிந்த அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அதிமுகவினர் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் வந்த காரை மடக்கி அதிலிருந்த நிர்வாகிகளை அடித்து உதைத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.