தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையாக உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள தனியார் பள்ளியில் லயன்ஸ் கிளப் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் உறுப்பு தானம் செய்தல், ரத்த தானம் செய்தல் மற்றும் உலக சமாதானம் போன்ற எழுத்து பதாகைகளை ஏந்திசென்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ’கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. நீதிமன்றம், அதனை தவறு என்று கூறி தற்போது சுதந்திரமாக இருக்கிறார் நக்கீரன் கோபால். பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை, தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையாக உள்ளது, யாருக்கும் எந்த கெடுதலோ, அச்சுறுத்தலோ இல்லை’ என்று தெரிவித்தார்.
‘ஊடக நிறுவனத்தில் புகுந்து அடித்தவர்கள் யாரென்று தெரியும், பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேசும் திமுக கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டும். பத்திரிகையாளர்களும் அதனை நினைவு கொள்ளவேண்டும்’ என்றும் அவர் சொன்னார். மேலும் எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜா கைது செய்யபடவில்லை என்று பேசுவது அரசியலுக்காக பேசப்படும் விமர்சனங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.