திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான அதிமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவாரூரில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது “கருணாநிதி உண்ணாநோன்பு இருந்த நாளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதம் முடிந்த போது போர் நின்றுவிட்டதாக கருணாநிதி அறிவித்ததை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளிவந்த இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலைகளை செய்தது ராஜபக்சே மட்டும் அல்ல திமுகவினரும் போர் குற்றவாளிகள். தமிழக பிரச்னைகளுக்காக ஈழத் தமிழர்களுக்காக ஒரு கடிதம் கூட எழுதாத நிலையில் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க டெல்லி சென்று பதவியை வாங்கியவர் கருணாநிதி” என்று கூறினார்.
மேலும் அதிமுக ஆட்சியை ஸ்டாலின், தினகரன் எவர் நினைத்தாலும் கலைக்க முடியாது. அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று கூறுபவர்களால் அதனை நிரூபிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.