துரைமுருகன் நண்பர் வீட்டில் பணம் சிக்கியது குறித்து விசாரணையில் உண்மை தெரியவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசனின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, வேலூரில் உள்ள சிமென்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “எங்களுக்கு கொல்லை புறம் தெரியாது. பணத்தின்மீது அதிமுகவுக்கு நம்பிக்கை இல்லை. நீதிமன்றங்களையும் மீறி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் மீது அவதூறு பரப்புகிறார். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பணம் குறித்து ஆணித்தனமாக துரைமுருகன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கவில்லை. விசாரணையின்போது உண்மை வெளிப்படும். தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என முடிவெடுப்பது தேர்தல் ஆணையம், அதிமுக கிடையாது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.