துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவிக்கு தி.மு.க-வின் பொருளாளராக இருந்த துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல் துரைமுருகன், தான் வகித்துவந்த பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். ஆனால், அதன்பிறகு கொரோனா தாக்கம் அதிகரித்ததால், தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் நிர்வாகிகள் தேர்வும் தள்ளிப்போனது.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர், எம்.பி பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல எனவும் அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக, இந்த இயக்கத்துக்கு வந்தவன் எனவும் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும். திமுக ஒரு ஆலமரம். திமுகவில் அதிருப்தியில் உள்ள யார் வந்தாலும் நிழல் கொடுக்கப்படும்.
கு.க செல்வம் கட்சியில் இருந்து விலகியது உள்கட்சி விவகாரம். திமுகவின் முதல் விக்கெட் கு.க செல்லம். துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு தான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரைமுருகன் அதிமுகவுக்கு வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதற்கு எங்களது இயக்கம் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.