அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், "அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டாலும், இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தற்போதும் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள், பழனிசாமி அணியை சந்தித்து வருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயம் தான்" என்றார்.
இதனிடையே அதிமுக-வை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்க இரு அணிகளும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழுவின் தலைவராக பன்னீர்செல்வமும், துணைத் தலைவராக பழனிசாமியும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள 5 பேர்களில் எடப்பாடி அணியிலிருந்து 3 பேரும், ஓபிஎஸ் அணியிலிருந்து இரண்டு பேரும் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. முதலமைச்சராக பழனிசாமி நீடிக்க ஓபிஎஸ் அணி தரப்பில் ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, ஓபிஎஸ் அணி தரப்பில் இரு அணிகளாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின் முதலமைச்சர் பழனிசாமி தரப்பு ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தரப்பு மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகள் இணைப்புகான பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே இரண்டு தரப்பில் இருந்தும் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. அத்தோடு ஓபிஎஸ் தரப்பும் தனது பேச்சுவார்த்தை குழுவை கலைத்திருந்தது.