ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு எப்போதும் திராணி இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உள்பட எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுகவுக்கு எப்போதும் திராணி இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது. ஜெயா தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சியாக மாறிவிட்டது. துரைமுருகன் பேட்டியை ஒளிபரப்பியதே அவர்களது திமுக சார்பை வெளிப்படுத்துகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஆளுநர் தனது ஆய்வு குறித்து விளக்கம் அளித்து விட்டார். தனது வரையறைக்குள்ளேயே அவர் செயல்பட்டு வருகிறார். மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே அதில் உண்மை தெரியவரும்” என தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள் என கேள்விக்குறியோடு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மைத்ரேயன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கூறினார்.