தமிழக மீனவர்கள் சுடப்பட்ட பிரச்னையில் நிர்மலா சீதாராமன் கருத்தை ஆமோதிப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது அண்மையில் இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த குண்டுகள் தங்களுடையது இல்லை என மறுத்த கடலோரக் காவல்படை, பின்னர் இந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினரிடம் டிஎஸ்பி அந்தஸ்து குறையாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்திய கடலோர காவல்படையினர் அல்ல என தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை தாம் ஆமோதிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தெரியாதது எதுவுமில்லை என தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன், துப்பாக்கிச்சூடு தொடர்பாக மீனவர்கள் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.