“ஐந்தில் வளையாயது ஐம்பதில் வளையாது” என்பதை போல வளரும் குழந்தைகளுக்கு வெறும் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுக்காமல் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும், பொது இடங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதை கற்பித்தல் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
சிறுவயதில் விதைப்பதுதான் வளர்ந்த பிறகும் தொடரும். ஆகவே குழந்தைகளுக்கு மனிதர்களை பற்றியும், மனிதத்தையும் போற்ற கற்பிப்பது எத்தனை முக்கியமானது என்பதை வெறும் 27 நொடியே அடங்கிய ஒரு வீடியோ உணர்த்திவிடும்.
அதன்படி, வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளுக்கு கனிவு, இரக்கத்தை சொல்லிக்கொடுக்கும் வகையில் புது முயற்சியை ஒரு ஆசிரியர் மேற்கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு குட்டி சிறுவன் பேருந்தை ஓட்டுவதும், மற்ற குழந்தைகள் பயணிகள் போலவும் நடிக்கிறார்கள். மேலும் முதியோர், தாய்மார்கள், கர்ப்பிணிகள் வந்தால் அவர்களது தேவையை அறிந்து தான் இருக்கும் இருக்கைகளை விட்டுக் கொடுக்கிறார்கள். இந்த வீடியோதான் ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
மேலும் பலரும் குழந்தைகளின் செயலையும், மனிதனாக இருக்க தேவையான முக்கிய அம்சங்களை சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கும் நெட்டிசன்கள் தத்தம் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் “இதில் என்ன சோகமான விஷயம் என்னவென்றால் இதுப்போன்ற கல்வியை தற்போது எல்லாரும் செய்வதில்லை.
சமூக வலைதளங்களில் இதுப்போன்ற வீடியோக்கள் பகிர்வது வரவேற்கத்தக்கது.” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “இந்த மாதிரியான கல்விதான் இந்த உலகத்திற்கு தேவை” என்றும் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று வேறு என்னமாதிரியான நல்லவைகளை குழந்தைகளுக்கு படிப்பிக்கலாம் என்ற உங்களது கருத்தையும் தெரிவியுங்கள்.