திருப்பூரில் கொரோனா மற்றும் பொதுமுடக்க நெருக்கடியிலும் வட்டியுடன் கடனை செலுத்துமாறு பைனான்ஸ் நிறுவனங்கள் குடும்பப் பெண்களை மிரட்டி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் ஏழைகள் மற்றும் சிறு, குறு தொழில் செய்யும் பெண்களை தேடிச் சென்று, அவர்களை 12 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகின்றன. அந்த வகையில் தாராபுரத்தை அடுத்த தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம், வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தும்படி பைனான்ஸ் நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானம் முழுவதும் இழந்து, குடும்ப வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் நிலையில் கடனை உடனே செலுத்த முடியாத நிலையில் பெண்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களை கடனை கட்டியே ஆக வேண்டும் என பைனான்ஸ் நிறுவனங்கள் மிரட்டியுள்ளன. அத்துடன் இனிமேல் எந்த வங்கியிலும் கடனை பெற முடியாத அளவிற்கு முடக்கப்போவதாகவும் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாத தவித்த பெண்கள், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து போராட்டத்தில் குதித்தனர்.
தாராபுரம் கொட்டாப்புளி பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் என்ற தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை திடீரென முற்றுகையிட்டு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா மற்றும் பொதுமுடக்கம் நெருக்கடியால் தங்களுக்கு கடனை திரும்ப செலுத்த மேலும் 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் அதற்கு முறையாக பதிலளிக்கவில்லை எனப்படுகிறது.