கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், பருவமழை நன்றாக பெய்யவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆண்கள் தங்களது தலையில் முளைப்பாரி சுமந்து சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் முளைப்பாரி திருவிழா நடத்துவது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி தொடங்கியது. அன்றிலிருந்து முளைப்பாரியை சூரியஒளி படாமல் 7 நாட்கள் வளர்த்து வந்தனர்.
இதையடுத்து இன்று பருவமழை நன்றாக பெய்து விவசாயம் செழித்து அதன்மூலம் அதிக மகசூல் கிடைக்க வேண்டும். அதேபோல கொரோனா பரவல் அதிகமாக ஏற்படாமல் இருக்க வேண்டி ஆண்கள் மட்டும் தங்களது தலையில் முளைப்பாரியை சுமந்து கொண்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை சுற்றி வணங்கிய பின்னர் அடைக்கலம் காத்த அம்மன் கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
இதன் மூலம் இந்த ஆண்டு பருவமழை பெய்து விவசாயம் செழித்து அதிக மகசூல் கிடைக்கும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.