215-வது முறையாக களத்தில் தேர்தல் மன்னன் பத்மராஜன்! முதல்வர் தொகுதியில் போட்டியிட மனு

215-வது முறையாக களத்தில் தேர்தல் மன்னன் பத்மராஜன்! முதல்வர் தொகுதியில் போட்டியிட மனு
215-வது முறையாக களத்தில் தேர்தல் மன்னன் பத்மராஜன்! முதல்வர் தொகுதியில் போட்டியிட மனு
Published on

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர், இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்த போதும் மனம் தளராமல் 215-வது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவருக்கு ஸ்ரீஜா (53) என்ற மனைவியும், ஸ்ரீஜேஷ் (26) என்ற மகனும் உள்ளனர். டயர் ரீ ட்ரேடிங் வேலை செய்து வந்த பத்மராஜனுக்கு உலக அளவில் பிரபலமாகி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே ஒரே ஆசை. அதற்காக 1988 ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தேர்தல், சட்டசபை தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்த பத்மராஜன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்த்தும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இது மட்டுமல்ல முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ஏன் தற்போதைய ஆந்திர முதல்வரையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார். இதுவரை எந்த தேர்தல்களிலும் வெற்றிப் பெறாத பத்மராஜன், தனது தொடர் தோல்விகளின் மூலமாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார். இதற்காக இதுவரை 30 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ள பத்மராஜன் தனது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட போதும் மனம் தளராமல் தனது முயற்சியை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்த பத்மராஜன்  215 வது முறையாக வேட்பு மனுவுடன் இன்று காலை 11 மணியளவில் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 216 வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளார். அதனைத்தொடர்ந்து 217 வது முறையாக கேரள சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயனை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் பத்மராஜன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com