மயிலாடுதுறையில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேர்தல் பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று, மயிலாடுதுறை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.சம்சுதீன் மயிலாடுதுறை நகர்புறத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று வாக்கு சேகரித்தார்.
இவர் ஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இருசக்கர வாகன டயரை ஓட்டிச்சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு, ஸ்டேட் பேங்க் ரோடு ஆகிய பகுதிகளில் அவர் பரப்புரை வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன், கேஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மாவட்ட மகளிர் அணி தலைவர் சலாமத் நிஷா கையில் விறகு அடுப்பை ஏந்தியபடி பிரசாரத்தில் கலந்துகொண்டார்.